சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் நடைபெற உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை (மே 10) ஆத்தூருக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இப்போது நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில், பாஜக அரிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதேபோல தமிழகத்திலும் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடரும். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இந்த கூட்டணி, இந்த மக்களவை தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து ஒத்த கருத்துடன் செயல்படும்.
தமிழக சிறையில் இருக்கும் ராஜிவ் கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிப்பதில் ஆளுநர் முடிவே இறுதியானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரைவில் ஆளுநர், 7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல முடிவினை அறிவிப்பார்.
எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் இல்லை என்பதால் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப அவர்கள் நல்ல முறையில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, ஆத்தூர் நகர த.மா.கா. தலைவர் சண்முகம், மாநில இளைஞர் அணி துணை பொதுச்செயலாளர் சத்தியா, வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, சேலம் கிழக்கு மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் ஜி.கே.வாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.