வேலூர் மாவட்டத்தில் சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மாதனூர் என்கிற கிராமம். இது வளர்ந்த கிராமம். இந்த கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. சுத்தியுள்ள பல கிராமங்களுக்கு இது மையமான பெரிய கிராமம்.
இந்த சாலையில் செல்லும் அரசு, தனியார் பேருந்துகளும் நின்று செல்லும். கடந்த ஜனவரி 16ந்தேதி சென்னையில் இருந்து பெங்களுரூ சென்ற தமிழ்நாடு அரசுப்பேருந்தில் மாதனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ஏறி கிருஷ்ணகிரிக்கு பயண சீட்டு வாங்கியுள்ளார்.
81 ரூபாய் வாங்கிக்கொண்டு பயண சீட்டு தந்துள்ளார் நடத்துனர். அந்த பயணி சீட்டில் அமர்ந்து சாவகாசமாக பயணசீட்டு சரியாக தரப்பட்டுள்ளதா என பார்த்தபோது, அதில் மாதனூர் என்பதற்கு பதில் மடனுர் என அடிச்சடிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுப்பற்றி நடத்துனரிடம் அந்த பயணி கேட்டபோது, நானாங்க பிரிண்ட் செய்றேன். இதுயெல்லாம் மிஷின் டிக்கட். இதை ஆப்ரேட் செய்யதான் எனக்கு தெரியும். இந்த மிஷினில் எங்கிருந்து எந்த ஊர் ?, அதுக்கு எவ்வளவு கட்டணம் அப்படிங்கறதை அதிகாரிகள் சிப் மூலமா பதிவு செய்து வச்சியிருக்காங்க. நாங்க பட்டனை தட்டினால் டிக்கட் வரும். தப்பா வருதுன்னா இதைப்பத்தி அதிகாரிகளிடம் தான் கேட்கனும் என்றுள்ளார்.
அந்த பயண சீட்டை அவர் சமூக வளைத்தளத்தில் பரப்ப வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் முழுவதும் பரவியுள்ளது. இதுப்பற்றி மாதனூர் மக்கள் அதிருப்தியாகியுள்ளனர். இன்னைக்கு இதை கேட்காம விட்டோம்ன்னா நாளைக்கே மடையனூர்ன்னு பிரிண்ட் செய்வாங்க இவுங்க என கொதிக்கின்றனர்.
டிக்கட்டில் ஊர் பெயரை தப்பாக பிரிண்ட் செய்தால் அந்த பேருந்தை மடக்கி நிறுத்தி போராட்டம் செய்யலாம்மா என அப்பகுதி மக்கள் பேசிவருகின்றனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.