![villupuram thiruvennainallur husband and wife issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/vqOrWmaSUFbxkZFQ-0i-ws2NeI4y61r8vy0WkCD6e0M/1672387162/sites/default/files/inline-images/art-img-villupuram_0.jpg)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முருகன் (வயது 35). இவருக்கும் சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது செண்பகம் என்பவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான மூன்று மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு செண்பகத்தை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்துள்ளனர். இதனையடுத்து செண்பகம் தன் தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், முருகன் இரண்டாவதாக சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், செண்பகத்தை சமாதானம் செய்து மீண்டும் தனது ஊருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்துவதாகக் கூறி அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் செண்பகம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் முருகன், அவரது தந்தை கண்ணையன், தாயார் கம்சலா, சகோதரி கல்யாணி, முருகனின் இரண்டாவது மனைவி சுந்தரியின் உறவினர் சந்திரமுகி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராணுவத்தில் இருந்து முருகன் ஓய்வு பெற்றார். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி வெங்கடேஷ் குமார் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் முருகனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், வழக்கில் தொடர்புடைய கண்ணையன், கம்சலா, கல்யாணி, சந்திரமதி ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். முருகன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் சுந்தரியை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.