கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமத்தில் சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிக்கு சொந்தமான கூரைவீடு ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன் மின் கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு பாக்கியத்திற்கு சொந்தமான கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. வீடு தீப்பற்றி எரிவதை அறிந்த பாக்கியம் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தில் இருந்து பொதுமக்களும் இளைஞர்களும் விரைந்துவந்து தீயை அணைக்க போராடினர். தீயை அணைத்துக்கொண்டிருக்கும்போது மின்சார கம்பத்தில் இருந்த லைன் வயர் அறுந்து விழுந்ததில் பாக்கியம் மகள் சுமதி, பேரன் திருமலை இருவர் மீதும் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். உடனே இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைத்தனர்.
மின்சார வயர் அறுந்ததற்கு காரணம், 200 அடி உள்ள இரண்டு மின்சார கம்பத்தில் போகும் வயர் லைன் நான்கு இடத்தில் பாதி பாதியாக பிணைப்பு இருந்ததால் அறுந்து விழுந்தது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இருப்பினும் நேற்று அதே கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு சுசீலாவுக்கு சொந்தமான வீட்டின் மீது விழுந்தது. அதனால் அங்கும் தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். இதேபோன்று நாளுக்கு நாள் அச்சத்தில் வாழும் பரிக்கல் கிராம மக்கள் உயிர் பலி வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.
தயவுகூர்ந்து மின்சாரத்துறை அதிகாரிகளும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியரும் பரிக்கல் கிராமத்தில் வாழும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தில் மேலே செல்லும் பழைய வயரை மாற்றி, புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பரிக்கலில் வாழும் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.
இரவில் படுத்து தூங்கும்போது என்னாகுமோ ஏதாகுமோ என்ற ஏக்கத்தில் இருக்கும் பரிக்கல் மக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை; காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என இரவில் சத்தம் கேட்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை உறக்கம் இல்லாமல் வாழ்ந்துவருகின்றனர். இங்கு வாழும் மக்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.