ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கரும்புகை சூழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது ஐயப்ப நகர் பகுதி. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த இரும்பு கடைக்கு சமீபத்தில் கெமிக்கல் பாய்லர் ஒன்று வந்திருந்த நிலையில் அதனை இரண்டாக உடைக்கும் பணியில் அக்கடையின் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கெமிக்கல் கண்டெய்னர் தீப்பற்றி எரிந்தது.
இதனால் அங்கு இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி எரிந்து அந்த பகுதியில் வானுயர கரும்பு புகை சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.