
பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சியில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்து பேசுகையில், ''பாலியல் வன்முறைகள் அல்லது பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும் பெருகி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல சமூக ஊடகங்களில் இன்றைக்கு பாலியல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை எல்லாம் வெகுவாக பரப்பப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
அரபு நாடுகளில் இதற்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற வன்கொடுமைகள் அல்லது பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு கட்டுப்பாடற்ற சமூக ஊடகச் சுதந்திரம், யூடியூப் போன்ற வலைத்தளங்கள் இயங்குவது முக்கியமான காரணங்களாக சொல்லப்படுகிறது. வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகவே தேசிய அளவில் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் பெருகுவதை தடுப்பதற்கு தேசிய அளவிலான ஒரு கொள்கை வரையறுக்கப்பட வேண்டும். இந்திய ஒன்றிய அரசுக்கு இதில் பொறுப்பு இருக்கிறது. மாநில அரசுகளுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு இதுபோன்ற குற்றங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பல்வேறு மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை ஆகியவற்றில் விரைந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றாலும் இதுபோன்ற குற்றங்கள் பெருகாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்'' என்றார்.