தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 'சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விஜய் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் மாநில அரசும் ஒன்றிய அரசும் நேர்கோட்டில் பயணிக்கிறது' என தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பிரேமலதா, 'உலக நாடுகளில் எங்குமே இல்லாத ஒரு விஷயம் நமது இந்தியாவில் இருக்கிறது. இங்கு பல்வேறு மதம், பல்வேறு சாதி, பல்வேறு இனத்தவர்கள் இணைந்தது தான் இந்தியா. அப்படி இருக்கும் பொழுது இந்தியர் என்ற உணர்வோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு, சாதியை வைத்து பிரிப்பது, சாதியை வைத்து யாரெல்லாம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சொல்கிறார்களோ அவர்களுக்கு பின்னாடி என்ன இருக்கிறது என்று பார்த்தால் அரசியல் மட்டும் தான் இருக்கிறது. இதனால் அந்த சாதிக்கு ஏதாவது பிளஸ் இருக்குமா? என பார்த்தால் கேள்விக்குறிதான். அப்படிப் பார்த்தால் வரப்போகின்ற அடுத்த தேர்தலில் வியூகம்தான் இது. அதனால் சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்வது இனி வரும் காலங்களில் நடக்காது'' என்றார்.
'தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் புதிதாக இணைவோர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படுவது' குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இது தேமுதிக தலைமை அலுவலகம். எங்கு வேறொரு கட்சி நிர்வாகத்தை பற்றி கேள்வி கேட்கிறீர்கள். இதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். விஜய்யை இதே மாதிரி ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு கூப்பிடுங்க. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து விஜய்யிடம் கேள்வி கேளுங்கள். அதற்கான பதிலை அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றார்.