திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் அறிவிப்பின்படி, இன்று தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மொத்தம் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நெமூரில் உள்ள வாக்குச்சாவடியில் பெண்கள் மட்டும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவிற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 41 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. விக்கிரவாண்டி மட்டுமல்லாது நாடு முழுவதும் மொத்தம் 13 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.