![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/hdnlb3ERoxzx18NKyv-h80qUm6mYdAgXyqqNWA5JmeU/1545985554/sites/default/files/inline-images/vijayakanth_14.jpg)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை: ’’5-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில், பங்குபெறும் ஆசிரியர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு தினந்தோறும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மனவேதனையாக உள்ளது. “சமவேலைக்கு” “சமஊதிய” கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, இரண்டாயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.
இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆண் - பெண் இடைநிலை ஆசிரியர்கள் மயங்கி விழுந்தும் வருகின்றனர். ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிப்படை வசதிகள் மிக குறைவாக உள்ள DPI வளாகத்தில் 2000திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களது அன்றாட தேவைகள் ஏதும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.’’