இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில், இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதனை தொடர்ந்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.
இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இந்திய கிரிக்கெட் அணியின் மன உறுதியும் ஆர்வமும் பாராட்டுக்குரியது. அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டி வரை சென்று இந்திய அணிக்கு வாழ்த்துகள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.