கடந்த காலங்களில் ஆளுங்கட்சி நடத்தும் அரசு விழாக்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொள்வதில்லை என்ற நடைமுறைதான் தொடர்ந்து இருந்துவந்தது. ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு எதிர் கட்சி எம்எல்ஏக்களின் கை ஓங்கி இருப்பதை கண்டு எடப்பாடி அரசே எதிர்கட்சியினரை அனுசரித்து போகக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது.
அதுபோல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் ஆளுங்கட்சி நடத்தும் அரசு விழாகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். கடந்த10ம் தேதி பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் பளியங்கு ராசிமலையில் உள்ள மழைவாழ் கிராம மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு 3.50 கோடி மதிப்பீட்டில் வீடுகட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், அதுவரை தற்காலிக குடியிருப்புக்கு நிதி உதவியுடன் அந்த மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் ஒபிஎஸ் வழங்கினார்.
இந்த விழாவில் பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினரான சரவணக்குமாரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கியதை கண்டு ஆளும் கட்சியினரே அசந்து போய் விட்டனர்.
இது சம்பந்தமாக திமுக எம்எல்ஏ சரவணக்குமாரிடம் கேட்ட போது...
மக்கள் பங்களிக்கும் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தலைமை அறிவுறிருத்தியுள்ளது. அதனடிப்படையில் ஒபிஎஸ் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். அப்பொழுது இப்பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறினேன். அதுபோல் கூடிய விரைவில் மழைகாலம் தொடங்க இருப்பதால் தொகுதியில் உள்ள மஞ்சளாறு டேம், சோத்துபாறைடேம், வைகைடேமை உடனடியாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகளும் பொதுமக்களும் பயன் அடைவார்கள். அதுபோல் மக்களுக்கு நலத்திட்ட வழங்கு வதிலும், அரசு சலுகைகளிலும் கருத்து வேறுபாடுபார்க்க கூடாது என ஒபிஎஸ் சிடம் கூறினேன். அதை பொறுமையாக கேட்ட ஒபிஎஸ்சும் நான் துணை முதல்வராக இருக்கிறேன் எனது மகனும் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் இணைந்தே நிறைவேற்றி கொடுப்போம் என உறுதி கூறி இருக்கிறார்.
அதன் மூலம் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி கொடுப்பேன் என்று கூறினார். ஆக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து மக்கள் நலனில் கை கோர்த்து வருவதை கண்டு பொதுமக்களும் கூட பாராட்டி வருகிறார்கள்.