“நீங்க யாருக்கு லஞ்சம் கொடுத்தீங்களோ அவங்ககிட்ட போயி கேளுங்க பிரதர்.. எங்கள வேல செய்ய விடுங்க” என லாரி டிரைவரின் கேள்விக்கு பதிலளித்த போலீசாரின் வீடியோ தற்போது அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.
சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அந்த சட்டம் தமிழ்நாட்டிலும் அமலானது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நூறு இருநூறு என விதிக்கப்பட்டு வந்த பழைய அபராதத் தொகைகள் தற்போது ஆயிரம் பத்தாயிரம் என உயர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை மாவட்டம் கற்பகம் கல்லூரி அருகே உள்ள டோல்கேட் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரி டிரைவர் சரியான சீருடை அணியாமல் லாரி ஓட்டியதற்காக அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த லாரி டிரைவர் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசும்போது, “சீருடை போடலன்னு 5,000 ரூபா அபராதம் போடுவீங்களா. அப்படினா எல்லா வண்டியும் புடிங்க.. எனக்கு மட்டும் எதுக்கு அபராதம் போட்டீங்க" என அந்த லாரி டிரைவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்.
அந்த டிரைவர் தொடர்ந்து பேசும்போது, “எங்களுக்கு மட்டும் கேஸ் போட்றீங்களே.. நீங்க முதல்ல ஒழுங்கா சீருடை போடுங்க. அன்னைக்கு கூட எங்கிட்ட 500 ரூபாய் கேஸ்க்கு 200 ரூபாய் லஞ்சம் வாங்கிட்டு விட்டுடீங்க” எனச் சொல்ல, “நீங்க யாருக்கு லஞ்சம் கொடுத்தீங்களோ, அவங்ககிட்ட போயி கேளுங்க” என அந்த போலீசார் பதிலளித்தனர். இச்சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் பதிவு செய்த லாரி டிரைவர், காவலர்கள் தலையில் தொப்பி அணியாமல் பணி செய்வதை யார் கேள்வி எழுப்புவது? என சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.