2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டதொடர் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே சிறிது நேரத்திலேயே வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடனே தேசியக் கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரன் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
அதனை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் 2வது நாள் அலுவல் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக, காங்கிரஸ், பா.ம.க வி.சி.க சி.பி.ஐ, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் அப்பாவுவிடம் அளித்தது.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அலுவல் இன்று (08-01-25) தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான் விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது. கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் ஒவ்வொருவரும் பேசி வந்தனர்.
அந்த விவாதத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன், “பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் மத்திய அரசு பொறுப்பில் உள்ள தளத்தில் வெளியாகின. பாலியல் வன்கொடுமையால் கடந்த 2 வாரங்களில் தமிழ்நாடு போராட்ட களமாக மாறியுள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. காவல்துறையும், முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும். யார் அந்த சார்? என்பது குறித்து ஆளுநர் வாய் திறக்கவில்லை. ஆளுநருக்கும் கடமை உண்டு. கைதான ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை வெளியிட வேண்டும். உண்மைக்கு மாறாக அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுகின்றனர். உண்மையை வெளியிட வேண்டும்” என்று பேசினார்.