கலைஞர் நினைவிடத்தில் கடந்த 8ஆம் தேதியில் இருந்து தற்போது வரை இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார் எஸ்.எம்.கே. அண்ணாதுரை. அஞ்சலி செலுத்த வருபவர்களை ஒழுங்குபடுத்துவதோடு, கலைஞர் நினைவிடத்தையும் பராமரித்து வருகிறார்.
நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
என் தந்தை குப்புசாமி திமுகவில் இருந்தார். அதன் வழியே நானும் திமுகவில் இணைந்தேன். சென்னை மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராக இருக்கிறேன். தலைவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தேன். பின்னர் தலைவர் நினைவிடத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் இங்கேயே இருக்கிறேன்.
ஆயிரம் விளக்கு பகுதியில்தான் எனக்கு வீடு இருக்கிறது. வீட்டுக்கு சென்றுவிட்டு உடனே புறப்பட்டு வந்துவிடுவேன். எனக்கு இரண்டு பிள்ளைகள். மகன் பி.இ. படிக்கிறான். மகள் 8ஆம் வகுப்பு படிக்கிறாள். எனக்கு எல்லாமே தலைவர்தான். தலைவருக்காக நான் எதையும் கொடுக்க தயார். இந்த நாட்டுக்காகவே வாழ்ந்த தலைவர்.
தமிழக மக்களைப் பற்றி எந்த நேரமும் சிந்தித்தவர், தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொடுத்தவர், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். இந்த மாபெரும் தலைவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். கலைஞருக்கு இதனை வழங்கினால் பாரத ரத்னா விருதுக்கு பெருமை கிடைக்கும்.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தலைவர் கலைஞர் மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது தலைவர் கலைஞர் கையால் கருப்பு சட்டையை பெற்று அதனை தொடர்ந்து மூன்று வருடம் அணிந்திருந்தேன். தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கை அரசை கண்டித்தும் அணிந்திருந்தேன். மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் கேட்டுக்கொண்டதன் பேரில் மூன்று வருடம் அணிந்திந்த சட்டையை கழற்றினேன்.
தலைவர் என்னை ஒருமுறை அழைத்து பேசினார். எங்க இருக்க என்று கேட்டபோது, மெட்ராஸ்தான் என்றேன். அப்படி சொல்லாதீங்க, சென்னை என்று சொல்லுங்க என்றார். இதேபோல ரெண்டு, மூனு தடவை அழைத்துப் பேசியிருக்கிறார் என்றார் கலங்கியபடி...