வங்கக் கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கித் தவித்த போர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக காப்பாற்றி அவர்களுக்கு காட்சியளித்து கரைசேர்த்த நாளை நினைவுகூரும் வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியான நேற்று உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை பேராலயத்திலிருந்து மாதா திருவுருவம் பொறித்த கொடியினை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் கொடியினை புனிதம் செய்தபின், லட்சக்கணக்கான மக்களின் மரியே வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளக்க கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா கோவிலின் அனைத்து கோபுரங்களிலும் மின்விளக்குகள் அற்புதமாய் எரிய வண்ணமயமான வாண வேடிக்கைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியைக் காண வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள மும்பை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி மாதாவை வேண்டிக்கொண்டு விழாவில் பங்கேற்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்ப்பவனி வரும் 7-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8 ஆம் தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி பாடல் நிறைவேற்றப்பட உள்ளன.