Skip to main content

பிப்ரவரி 7ல் மனுதர்ம சாத்திர எரிப்புப் போராட்டம்  எழுச்சியாக நடைபெறவேண்டும்!கி.வீரமணி

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

 

v


பிறவியில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் மனுதர்மம் எரிப்புப் போராட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அருமைக் கழகத் தோழர்களே!  வரும் பிப்ரவரி 7 அன்று தமிழ்நாடெங்கும் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்ம சாத்திர எரிப்புப் போராட்டம்  எழுச்சியாக நடைபெறவேண்டும்!

புதிய போராட்டமல்ல!

இந்தப் போராட்டம் நமது இயக்க வரலாற்றில் ஒன்றும் புதிதுமல்ல; 1922 இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டிலேயே மனுதர்மமும், இராமாயணமும் எரிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியன்று குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் மனுதர்மம் எரிக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் (25 ஆம் தேதி) மகாராட்டிரத்தில் மகத் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் கொளுத்தினார்.

1981 மே 17 ஆம் தேதியும் ஆயிரக்கணக்கான மகளிர் பங்கேற்ற மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு முன் (2017) அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதியன்றும் கொளுத்தப்பட்டது.  இப்பொழுது பிப்ரவரி 7 ஆம் தேதியன்று மனுதர்ம நூலைக் கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட கழகம் அறிவிப்புக் கொடுத்துள்ளது.

 

எதற்காக இந்தப் போராட்டம்?

‘எதற்காக இந்தப் போராட்டம்?’ அதற்கான விளக்கங்கள் அடங்கிய துண்டறிக்கை கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பெற்றுக்கொண்டு அனைத்து மாணவர் கழகப் பொறுப்பாளர்களும், அனைத்து அணியினரும் குறிப்பாக மகளிரணி, மகளிர் பாசறையினரும் கடைக்கு கடை, வீட்டுக்கு வீடு சென்று விநியோகிக்க வேண்டுகிறோம்.

பார்ப்பனர்களைத் தவிர இந்த நாட்டில் உள்ள அனைவரும் சூத்திரர்கள் - சூத்திரர்கள் என்றால், வேசி மக்கள் என்று கூறும் மனுதர்மம் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415) எரிக்கப்பட வேண்டாமா?

சூத்திரர்களையும், பெண்களையும் கொல்லுவது பாவமாகாது என்று கூறும் மனுதர்மம் (மனுதர்மம் அத்தியாயம் 11; சுலோகம் 66) தீக்கு இரையாக வேண்டாமா? 

விவசாயம் என்பது பாவத் தொழில் என்று கூறுவதும் இந்த மனுதர்மம்தானே! (மனுதர்மம் அத்தியாயம் 10; சுலோகம் 84). இதனை சாம்பலாக்க வேண்டாமா? 

 

மனுதர்மமும் - ஆர்.எஸ்.எசும்!

மனுதர்மம்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக்கப்பட வேண்டும் என்பது  ஆர்.எஸ்.எஸின் கொள்கை. (ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் ‘‘Bunch of Thoughts’’)  பார்ப்பன ஏடான ‘துக்ளக்‘ இன்றுவரை அந்த மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி எழுதிக்கொண்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களில் மனுதர்மம் அலங்கரித்து எடுத்துச் செல்லப்படுகிறது.
பிறப்பில் பேதம் பேசும் மனுதர்மத்தையும், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘’ எனும் திருக்குறளையும் சமப்படுத்துவதும் - மனுதர்மத்தின் சாரம்தான் திருக்குறள் என்று சங்கராச்சாரியிலிருந்து கடைகோடி பார்ப்பனர் வரை இழிவுபடுத்தி வருவதும் ஏற்கத்தக்கதுதானா?
இப்படி ஒரு நூல் இருக்கிறது என்பதே வெட்கக்கேடும், மானக்கேடுமாகும். இது தர்மமாம்! என்னே கொடுமை!!
நூற்றுக்கு 97 சதவிகித மக்களை, மக்கள் தொகையில் சரி பகுதி இருக்கக்கூடிய பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம  சாத்திரம் நாடெங்கும் எரியட்டும்! எரியட்டும்!!

 

அனுமதி மறுத்தால் தடையை மீறி நடத்துக!

எந்தெந்த ஊரில், யார் யார் தலைமையில், எந்த இடத்தில், எத்தனை மணிக்கு இந்தப் போராட்டம் என்பதை முன்கூட்டியே காவல்துறைக்கு எழுதிக் கொடுத்திட வேண்டும். காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டால், தடையை மீறிப் போராட்டம் நடந்திட வேண்டும். கைது செய்யப்பட்டால், இன்முகத்துடன் ஏற்போம்! 
‘ஒரு குலத்துக்கொரு நீதி’ சொல்லும் மனுநீதி ஒழிக!
பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் ஒழிக!
நம்மை சூத்திரர்கள் என்று கூறும் மனுதர்மம் ஒழிக! ஒழிக!!
விவசாயத்தைப் பாவத் தொழில் என்று கூறும் மனுதர்மம் ஒழிக!

என்ற முழக்கங்ளோடு மாவட்டத் தலைநகரங்களில் மனுதர்மத்துக்குத் தீ மூட்டப்படவேண்டும்.  கட்டுப்பாட்டுடனும், யாருக்கும், எந்த பொருளுக்கும் இடையூறு இன்றியும், இந்தப் போராட்டம் நடைபெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம்! முக்கியம்!!

 

கொளுத்தப்படவேண்டிய நகல் தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.  கொளுத்தும்போது எங்கும் தீ பரவாமல் இருக்க, ஒரு வாளியில் தண்ணீரும், மற்றொரு வாளியில் மண்ணும் தயாராக இருக்கவேண்டும். வேறு எவருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது.
நாம் நடத்த இருப்பது - 
அரசியல் போராட்டமல்ல; 
சமூக மாற்றத்துக்கான போராட்டம் - 
மனித சமத்துவத்துக்கான தன்மானப் போராட்டம் -
மதச்சார்பற்ற அரசு என்ற கொள்கையுள்ள அரசியல் சட்டத்தை விலக்கி, மனுதர்மத்தை ஆட்சி சட்டமாக்கத் துடிக்கின்றன காவிகள், மறவாதீர்!
அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்கான உரிமைப் போராட்டம்!
நடக்கட்டும்! நடக்கட்டும்!!
நாடெங்கும் நடக்கட்டும்!
இந்தப் போராட்டம் குறித்து நாளைய வரலாறு பேசும்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

 

சார்ந்த செய்திகள்