நெல்லை குறிச்சிகுளத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் செல்போன் பயன்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளான். கார்ட்டூன் மற்றும் கார் ரேஸ் போன்ற வீடியோக்களை பார்ப்பது என தீவிரமாக செல்போனில் மூழ்கியிருந்த சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கி செல்போன் மோகம் பிடித்து எப்பொழுதும் செல்போனும் கையுமாக இருந்துள்ளான். மூன்றாம் வகுப்பே படிக்கும் அந்த சிறுவன் டிக் டாக்கில் சினிமா வசனங்களுக்கு தனது திறமையைக் காட்டி பெற்றோரை மகிழ்வித்து உள்ளான்.

யார் கையில் செல்போன் வைத்திருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து வீடியோ பார்ப்பதையும் வாடிக்கையாக்கிய அந்த சிறுவன் செல்போனுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26ம் தேதி நண்பர்களுடன் விளையாட சென்ற அந்த சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தீவிரமாக அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அந்தச் சிறுவன் அங்குள்ள குளக்கரை என்னும் இடத்தில் உள்ள புதரில் தலை நசுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். சம்பவத்தன்று விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை இளைஞர் ஒருவர் செல்போனில் வீடியோ காண்பித்து அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.


மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுவனை அழைத்துச் சென்றது அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என தெரியவந்து மாயாண்டியை பிடித்து விசாரித்த போது இந்த கொலைக்கான மர்மம் விலகியது. செல்போனில் வீடியோ பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்க அந்த சிறுவனிடம் சம்பவத்தன்று சில டிக் டாக் வீடியோக்களை பார்க்க செல்போனை கொடுத்து மாயாண்டி தனியாக அழைத்துச் சென்றுள்ளான். அதன்பின் குளக்கரைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான் 25 வயதான மாயாண்டி.


இதனால் அதிர்ந்து போன சிறுவன் சத்தமிட்டதால் எங்கே தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று பயந்து சிறுவனின் வாயை பொத்தி கொலை செய்துள்ளான் மாயாண்டி. சிறுவனின் சடலம் அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முகத்தை சிதைக்கும் விதமாக சிறுவனின் தலையில் கல்லை போட்டுவிட்டு தலைமறைவாகி உள்ளான்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொடூரன் மாயாண்டியை கைது செய்த காவல்துறையினர் முக்கிய தடயங்களையும் சேகரித்தனர். மழலையர்களின் செல்போன் மோகத்தை பெற்றோர்கள் கண்டுகொள்ளமால் அலட்சியமாக விட்டால் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சான்றாக அரங்கேறியுள்ளது. அதிக நேர செல்போன் பயன்பாடு மழைலையர்களின் உடல்நலத்தை கெடுப்பதோடு செல்போன் மோகத்தினால் இதுபோன்ற விபரீதங்களும் நடைபெற வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.