சேலத்தில், சயனைடு கலந்த சாக்லெட்டை தின்று இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவைச் சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவருடைய மகன் சுரேஷ் (22). பிளஸ்-2 முடித்துவிட்டு, அப்பாவுடன் இணைந்து வெள்ளித்தொழிலை கவனித்து வந்தார்.
கடந்த அக். 8ம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில், வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிய சுரேஷ், அதன்பின் வீடு திரும்பவில்லை. வழக்கமாக எங்கே சென்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்பதால், மகன் வராதது குறித்து பெற்றோர் பதற்றம் அடைந்தனர். அவருடைய செல்போனுக்கு தொடர்ந்து முயற்சித்தபோது அணைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வரவே, உடனடியாக நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேட ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில்தான் அன்று இரவு 11 மணியளவில், குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கோபிக்குச் சொந்தமாக உள்ள கார் ஷெட் முன்பு சுரேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிற்பது தெரிய வந்தது. கார் ஷெட்டின் கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்ததால், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் சுரேஷூம், அவர் அருகில் ஓர் இளம்பெண்ணும் வாயில் ரத்தமும், நுரையும் வெளியேறியபடி, அமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் இருவருமே அரைகுறை ஆடையில் கிடந்தனர். இதைக் கண்டு சுரேஷின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரின் ஏசி இயங்கிய நிலையில் இருந்தது.
இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதல்கட்ட விசாரணையில், சுரேஷூடன் இறந்து கிடந்தது, குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜோதிகா (20) என்பதும், இருவரும் காதலர்கள் என்பதும், சாக்லெட்டில் சயனைடை கலந்து தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இருவரும் தொடர்ச்சியாக தினமும் செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
காதல் ஜோடி இருவருமே சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சுரேஷின் பெற்றோர் அளவுக்கு ஜோதிகாவின் குடும்பம் பொருளாதார வசதி கொண்டது இல்லை. மேலும், 'படிக்கிற வயதில் காதல் எதற்கு? படிப்பை முடி; பிறகு பார்க்கலாம்' என்று கூறி, ஜோதிகாவின் பெற்றோர் அவருடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு, ஜோதிகாவின் செல்போனுக்கு சுரேஷ் அனுப்பிய குறுந்தகவல் மூலமாகத்தான் மகளின் காதல் விவகாரம் அவருடைய பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. சுரேஷை பார்க்கவோ, பேசவோ கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இதற்கிடையே ஜோதிகாவுக்கு அவருடைய பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த ஜோதிகாவுக்கு படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதிலும் குறியாக இருந்துள்ளனர்.
இதையெல்லாம் சுரேஷிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார் ஜோதிகா. இதனால் எங்கே தாங்கள் நினைத்தபடி காதல் கைகூடாமல் போய்விடுமோ என்று கருதிய காதலர்கள், தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து, வெள்ளித்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடை சாக்லெட்டில் கலந்து தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்பு, அவர்கள் கலவியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும், தற்கொலை தொடர்பாக அவர்கள் ஏதாவது முன்கூட்டியே கடிதம் ஏதாவது எழுதி வைத்திருக்கிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இருவரின் சடலங்கள் குறித்த உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட விஷத்தின் தன்மை, அளவு, தற்கொலைக்கு முன்பு புணர்ச்சியில் ஈடுபட்டார்களா என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்கிறது காவல்துறை.