ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதியில் எங்கு பார்த்தாலும் பால்கோவா கடைகள்தான். வருவதில் பெரும்பாலானோர் வெளியூர் பக்தர்கள் என்பதால், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஃபேமஸ் ஆச்சே!’என்ற நம்பிக்கையுடன், பால்கோவாவின் தரம் குறித்து ஆராயாமல், எந்தக் கடையில் வேண்டுமானாலும் வாங்கிச் செல்வர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நேற்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பால்கோவா கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பாக்கெட்டில் உள்ள உற்பத்தி தேதி பார்த்து, காலாவதியான பொருளா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொண்டு, கடைகளுக்குள் இருந்த பிளாஸ்டிக் உறைகளையும் பறிமுதல் செய்தனர். கையுறை அணிந்துகொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள் லேபிளில் உணவின் பெயர், தயாரிப்பாளர் முழு முகவரி, உட்பொருட்கள் விவரம், சத்துக்கள் விவரம், சைவ (அல்லது) அசைவ குறியீடு, பேட்ச் எண், தயாரித்த (அல்லது) பேக் செய்த தேதி, எடை, பயன்படுத்த வேண்டிய தேதி, FSSAI எண் போன்ற விபரங்களைப் பார்த்து வாங்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டினர். அதிகாரிகளின் திடீர் ஆய்வும், நடவடிக்கையும், இனிப்பு வியாபாரிகளுக்கு கசப்பான அனுபவத்தைத் தந்துள்ளது.