சேலத்தில், அரசுப்பள்ளி மாணவிகளை முட்டிபோடச் சொல்லி தண்டனை கொடுத்த பெண் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தரமான கற்பித்தல் ஆகியவற்றால் இந்தப் பள்ளியில் மாணவிகளைச் சேர்க்க பெற்றோர்களிடையே எப்போதும் கடும் போட்டி நிலவும். நடப்புக் கல்வி ஆண்டில் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
அக். 6ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவிகள், திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு வளாகத்திலேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவிகளிடம் கேட்டபோது, ''பள்ளியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளைச் செய்து கொடுக்கும்படி தலைமை ஆசிரியரிடம் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, எங்களை மிரட்டுகிறார். பலர் முன்னிலையில் தரக்குறைவாக நடத்துகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் புழுக்கள் நெளிந்தன. இதுகுறித்தும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். அதற்கும் எங்களை மிரட்டியதோடு, எங்களை முட்டிபோடச் சொல்லி தண்டனை கொடுத்தார். இதை, அவருடைய கணவரை வைத்து செல்போனில் வீடியோ எடுத்தார். ஆகவே, தலைமை ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராடுவோம்,'' என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மோகன், சந்தோஷ் குமார், சேலம் நகர காவல் நிலைய காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதயளித்தனர். மேலும், தலைமை ஆசிரியர் தமிழ்வாணியும், என் மீது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கோரினார்.
இதையடுத்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு, வகுப்புகளுக்குச் சென்றனர். 3 மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் பள்ளி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
தலைமை ஆசிரியர் தமிழ்வாணி ஏற்கனவே சிலமுறை குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். கடந்த கல்வி ஆண்டில், மாணவிகள் சேர்க்கையின்போது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. அப்போது அவரை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். கடந்த முறை நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு முன்னதாக, விடைத்தாள் புத்தகத்தின் முகப்பு பக்கத்தில் 'ஃபிளை லீஃ' தாளை ஊசி நூல் கொண்டு தைக்கும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்திய விவகாரத்திலும் சிக்கினார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்ட பிறகு, மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்தப்பட்ட தமிழ்வாணி, தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, மாணவிகள் தங்கள் கோரிக்கைகளை எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, ஒரே நேரத்தில் போராட்டக் களத்தில் இறங்கியது எப்படி? அமைப்பு ரீதியாக இவர்களை ஒன்று திரட்டியதில் ஆசிரியர்களுக்கு தொடர்பு உள்ளதா? அவர்களை போராடும்படி தூண்டி விட்டது யார்? இதுகுறித்து உளவுத்துறைக்கு தெரியாமல் போனது எப்படி? என பல்வேறு கோணங்களில் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விசாரணை நடந்து வருகிறது.