மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணி புரிந்து வந்தவர் ஜெயபாண்டி. இவர் கடந்த மாதம் 13ம் தேதி (13.12.2024) திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கி வழிபாடு செய்ய வந்த 14 வயது சிறுமிக்கு ஜெயபாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரியவந்துள்ளது. சாமி தரிசனத்திற்கு வந்த சிறுமியிடம் ஜெயபாண்டியன் பேச்சுக் கொடுத்தார்.
அதன் பின்னர் சிறுமி கழிவறைக்குச் சென்ற போது அச்சிறுமியை பின் தொடர்ந்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுது கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்துப் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகள் நல மையத்திற்கும் (CHILD HELPLINE) தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தைகள் நல உதவி மையத்தினர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இது தொடர்பாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமி அளித்த புகாரில் உண்மைத் தன்மை உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யான ஜெயபாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு ஜெயபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக போலீஸ் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.