சென்னை மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தங்களின் 15 வயது மகள் இறந்து விட்டதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயதான நந்தினி என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சல் இருந்ததால் மண்ணடியில் உள்ள சென்னை நேஷனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு அல்சர் பிரச்சனை இருப்பது தெரிய வந்ததால் வயிற்றுப் புண்ணை சரி செய்ய தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டது. பிறகு வயிற்று வலியும் குறைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் நேற்று மதியம் மருத்துவர்கள் ஒரு ஊசியைச் செலுத்தியுள்ளனர்.அந்த ஊசி செலுத்திய பிறகு நந்தினியின் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டதாகப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த ஊசி செலுத்தப்பட்ட பிறகு தங்கள் மகளின் உடலில் பல்வேறு விதமான பின் விளைவுகள் உடனடியாகத் தெரிந்ததாகவும். அது ஏதோ தவறான ஊசி. அந்த ஊசியை எங்களின் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் எங்களுக்குத் தெரிவிக்காமலே செலுத்திவிட்டனர். அந்த ஊசி செலுத்திய பிறகு எங்களுடைய மகள் வலியால் துடித்தால் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தந்தை ரமேஷ் கூறுகையில், ''இன்று காலை எங்களை அழைத்து நந்தினி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டோம். எங்களுடைய மகளின் சாவில் மர்மம் உள்ளது. அது என்ன ஊசி? எதற்காக எங்கள் அனுமதியில்லாமல் செலுத்தினீர்கள். அந்த ஊசியை செலுத்திய பிறகு எங்கள் மகள் வலியால் துடித்தால் எங்களுடைய மகளின் சாவுக்கு இந்த மருத்துவமனையும் மருத்துவர்களுமே முழுப் பொறுப்பு” என்று கூறி மருத்துவமனையில் கதறி அழுது துடித்தார். 15 வயது மகளைப் பறிகொடுத்து விட்டுப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தது பார்ப்போரை நெஞ்சைப் பதறச் செய்யும் சோகமாக இருந்தது.
உறவினர் பையனைக் கட்டி அழுத மாணவியின் தாயார் "உனக்குதானே என் பொண்ண கல்யாணம் செஞ்சி கொடுக்க நினைச்சேன்... இப்படி அநியாயமா கொன்னுட்டானுங்களே..." என்று கூறிக் கதறி அழுதது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பெற்றோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளவர்களையும் சமாதானம் செய்தனர். இறுதியில் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் குற்றம் சாட்டி இருப்பதால் மாணவியின் உடல் அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை நேஷனல் மருத்துவமனையின் மருத்துவர்களிடம் நாம் விளக்கம் கேட்டபோது, “நாங்கள் சரியான சிகிச்சை தான் கொடுத்தோம். எந்த விதமான தவறான சிகிச்சையும் வழங்கவில்லை” என்று விளக்கம் கொடுத்தனர். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.