![The Union Minister praised the Tamil Nadu government](http://image.nakkheeran.in/cdn/farfuture/pe8U949hugu3bozZEekYeZXc1Wn-ogjXAVk1rDSFgxI/1689344590/sites/default/files/inline-images/ram-1.jpg)
தமிழக அரசின் சதுப்பு நில மேம்பாட்டு முன்னெடுப்பு பணிகளுக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இன்று (14.07.2023) கடற்கரை கழிமுகப்பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழல் காத்திடும் அலையாத்தி காடுகள் உருவாக்கிட மிஷ்டி இயக்கம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நடவு செய்தார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இது குறித்து தெரிவிக்கையில், “இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் இரண்டாவது அதிக பரப்பளவினை கொண்ட கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புயல் சீற்றத்தினை தடுத்திட அலையாத்தி காடுகள் மேம்பாடு மிகவும் பயனுள்ளதாகும். மிஷ்டி இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள கடற்கரை கழிமுகப்பகுதிகளான, உவர் நிலங்களில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாப்பதிலும், புதியதாக அலையாத்தி மரக்கன்றுகளை வளர்ப்பதில் சமூக ஆர்வலர்களுடன் மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டுக்குரியதாகும்.
![The Union Minister praised the Tamil Nadu government](http://image.nakkheeran.in/cdn/farfuture/UeeoalfpjSA9lvs0ilh6fzK-BLwdRGP-yzrrbFuo5to/1689344651/sites/default/files/inline-images/ram-2.jpg)
அலையாத்தி காடுகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை, சமூக ஆர்வலர்கள், கடற்கரை பகுதி கிராம மக்கள், மாணவர்களுக்கு எனது பாராட்டுகள். அதிக அளவு பரப்பளவில் அலையாத்தி காடு மரக்கன்றுகள் நடப்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், கார்பன் சமநிலை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.