'தீண்டாமை வேலி போன்ற குற்றச் சம்பவங்களை ஏற்க முடியாது' என உயர்நீதிமன்ற கிளை மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
அண்மையில் கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த சின்னமுத்து என்பவர் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது ஊரைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ஊருக்குள் வரக்கூடாது எனத் தீண்டாமை வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சின்னமுத்து சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், வேறு சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டதால் தீண்டாமை வேலி அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், தீண்டாமை வேலி போன்ற குற்றச் சம்பவங்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதி இளங்கோ, அந்தப் பகுதியில் ஏதேனும் தீண்டாமை வேலி இருக்கிறதா என கரூர் ஆட்சியர், பாலவிடுதி காவல் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.