
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (25-03-25) டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி, கே.பி முனுசாமி, தம்பிதுரை, சி.வி.சண்முக உள்ளிட்டோர் உடல் இருந்தனர். கடந்த 2023இல் அதிமுக - பா.ஜ.க கூட்டணி முறிவு ஏற்பட்ட போது, இனி எப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.
இருந்த போதிலும், பா.ஜ.கவோடு அதிமுக கூட்டணி சேரும் என்று தொடர்ந்து தகவல் பரவி வந்தது. இதற்கிடையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற அமமுக தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ எனப் பதிவிட்டுள்ளார். இதனால், மீண்டும் அதிமுக - பா.ஜ.க கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “எல்லாம் நன்மைக்கே..” எனத் தெரிவித்து அங்கிருந்து சென்றார்.