கரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. அதேசமயம் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டும் விட்டை விட்டு வெளியே வரலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்களின் நலனுக்காகவும், கிருமித் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காகவும் புதுச்சேரியின் முக்கிய இடங்களில் கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கிருமி நாசினி சுரங்கங்களைப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். அப்போது அவர், "பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு பொருட்கள் வாங்குமாறும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும்" கூறினார்.
இதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தாச்சலம் நகரத்திற்குள் வரும் முக்கிய வழித்தடங்கள், அம்மா உணவகம், காய்கறி சந்தை, கடைவீதி, பெரியார் நகர் உள்ளிட்ட எட்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிருமி நாசினி சுரங்கங்களைச் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் பிரவீன்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், தாசில்தார் கவியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, நெய்வேலி நகரத்தின் முக்கிய இடங்களில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சுரங்கங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தி, நோய்த் தொற்று ஏற்படாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.