நாகை அருகே விசாரணைக்கு சென்ற இடத்தில் அங்கிருந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து விட்டு காவலர் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அய்யாசாமி என்பவர் புத்தகரம் கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது சிறுமி ஒருவரிடம் விசாரணை நடத்திய அவர், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து செந்தில்குமார் என்பவர் நன்னிலம் காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறையிடம் புகார் அளிக்க சென்றுள்ளனர். புகாரை விசாரித்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளார்.
சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களிடம் நாகை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காவலர் அய்யாசாமி தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.