மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அப்போது, தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட கம்யூனிஸ்ட் கட்சியினர் நுழைவு வாயில் முன்பு சென்றனர். அவர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் அவர்கள் தபால் நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்டனர். அப்பொழுது தள்ளு, முள்ளு ஏற்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரிகார்டை தள்ளியபோது தேவநாதன் என்ற போக்குவரத்து காவலர் தலையில் அடிப்பட்டு காயமடைந்தார். தள்ளு முள்ளு ஏற்பட்டதில் 10 போலீசார் காயமடைந்தனர். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் உட்பட 6 பேர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உட்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலி மெயின் பஜாரிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு அரசு, நகர செயலாளர் பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் வேல்முருகன், சி.ஐ.டி.யு பொருளாளர் சீனிவாசன், அலுவலக செயலாளர் குப்புசாமி, காண்ட்ராக்ட் சங்க பொது செயலாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.