சென்னை & சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை எதற்காக அமைக்கப்படுகிறது என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஊடகத்தினரிடம் விளக்கம் அளித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசு கட்டட திறப்பு விழாக்கள், இல்லத் திருமண விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 30, 2018) சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது,
தமிழகத்தில் இப்போது 2.57 கோடி வாகனங்கள் உள்ளன. அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப எட்டு வழிச்சாலை அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் விபத்துகளும் வெகுவாக கட்டுப்படுத்தப்படும். முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது திமுக அங்கம் வகித்தது. அப்போது தமிழகத்தில் சாலைப்பணிகளுக்காக 3030 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதைவிட, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு வழிகாட்டி மதிப்பைக் காட்டிலும் நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.
நிலத்திற்கு மட்டுமின்றி அதில் உள்ள மரங்களுக்கும் இழப்பீடு வழங்குகிறோம். தென்னை மரங்களுக்கு அதன் வயதைப் பொருத்து, உதாரணமாக 17 அல்லது 18 வருடங்கள் ஆன மரத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் மட்டும் உள்ள குறு விவசாயிகளுக்கு மாற்று இடமும், பசுமை வீடும் கட்டிக் கொடுக்கப்படும்.
பாரத்மாலா திட்டத்தின் கீழ் எட்டு வழிச்சாலை போடப்படுகிறது. இது ஒரு மத்திய அரசின் திட்டம். தமிழ்நாட்டில் அந்த சாலை அமைவதால் அதற்கான நிலத்தை கையகப்படுத்தித் தருவது மாநில அரசின் கடமை. நிலம் எடுப்புப் பணிகளுக்காக வருவாய்த்துறை அதிகாரிகள் செல்லும்போது அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் காவல்துறையினரும் உடன் செல்கின்றனர். இந்த திட்டத்திற்காக நாங்கள் எந்த ஒரு விவசாயியையும் கைது செய்யவில்லை.
அரசின் வளர்ச்சித் திட்டங்களை சமூக ஆர்வலர்கள் எப்போதும் பாராட்டுவதில்லை. விபத்தில் ஒருவர் இரண்டு கைகளையும் இழந்து விட்டார். அவருக்கு அரசு மருத்துவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் கைகளை பொருத்தி சாதனை செய்தனர். இதைப்பற்றி எந்த ஒரு சமூக ஆர்வலரும் பாராட்டாமல் எட்டு வழிச்சாலைக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்வது சரியல்ல.
இந்த சாலைத் திட்டத்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால்தான் பலர் அரசியல் காழ்ப்புணர்வுடன் எதிர்க்கின்றனர். இந்தத் திட்டம் நிறைவடைய நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் பெட்ரோல், டீசல் விலை 90 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விடும். எட்டு வழிச்சாலையால் பயண தூரம் குறைகிறது. அதனால் வாகனங்களின் தேய்மானம், எரிபொருள் செலவும் குறைகிறது.
உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கினால்தான் ஏராளமான தொழில் முதலீடுகள் தமிழகத்திற்குக் கிடைக்கும். எட்டு வழிச்சாலை என்பது ஒட்டுமொத்த மக்களுக்கான திட்டம்தான். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். அவரிடம், ''கஞ்சமலை, கவுத்தி மலைகளில் இருக்கும் கனிம வளங்களை தனியார் நிறுவனம் எடுத்துச்செல்ல வசதியாகத்தான் எட்டு வழிச்சாலை போடப்படுவதாக சொல்லப்படுகிறதே?,'' என்று கேட்டதற்கு, ''கற்பனையான கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது,'' என்றார்.