கோவை மாநகரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி கலப்பட டீத்தூள்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை ஈச்சனாரி பகுதியில் டீத்தூளை கலப்படம் செய்து பாக்கெட்டுகளாக மாற்றி நகரின் முக்கிய பகுதிகளில் விநியோகம் செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் ஈச்சனாரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கலப்பட டீத்தூள் இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு, இயந்திரம் மூலம் அவற்றை பாக்கெட்டுகளாக மாற்றி கடைகளில் விநியோகம் செய்து வந்ததும் கண்டறிப்பட்டது.
அதைத் தொடர்ந்து 4.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு டன் கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தில் டீ தூள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த குனியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் குடோனின் உரிமையாளர் குனியமுத்தூரை சேர்ந்த ஷெரிப் என்பது தெரிய வந்தது.