பொதுமக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கும் அறிவிப்பை வாபஸ் பெறுவதோடு, சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சி லாபம் கொழிக்கும் ஆலைகள், தண்ணீர் மாஃபியா நிறுவனங்கள், குளிர்பான நிறுவனங்களை கண்காணிக்கும், அவற்றின் சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்தும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
2019 ஜூன் மாதம் முதல், வீடு உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீரை எந்த வகையில் எடுத்து பயன்படுத்தினாலும், அதற்காக அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி ஓர் அங்குலம் விட்டம் கொண்ட குழாயில், 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்களுக்கு, ஒரு கன மீட்டருக்கு 2 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
பொது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான குடிநீரை, இலவசமாக வழங்குவதுதான் மக்கள் நல அரசின் தலையாய பணி. ஆனால், அதனை அரசு முழுமையாக வழங்காத போது, அதற்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துவதுதான் நிலத்தடி நீர். தற்போது அதற்கும் கட்டணம் விதித்து தடை போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இது ஒருவகையில் குடிமக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.
நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கும் இந்த திட்டம் என்பது, பெப்சி, கோக், யுனிலிவர், மெக்கன்ஸி ஆகிய பன்னாட்டு பெருங்குழுமங்களின் நிதி ஆதாரத்துடன் செயல்பட்டுவரும் நீர் ஆதாரக்குழு 2030 (WATER RESOURCES GROUP 2030) என்கிற அமைப்பு, இந்திய அரசிடம் அளித்த “தேசிய நீர் ஆதாரத்திட்ட வரைவு ஆய்வு- சீர்திருத்ததுக்கான திசைகாட்டி” என்ற அறிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தான் “தேசிய நீர்க் கொள்கை 2012” என்ற தலைப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மனித இனம் உயிர் வாழ்வதற்கும், சுற்றுச் சூழல் அமைப்புகள் உயிர்ப்புடன் இருப்பதற்கும் தேவையான குறைந்தபட்ச தண்ணீரைத் தவிர, மற்ற தண்ணீரெல்லாம் சந்தை பொருளியல் வளமாகப் பேணப்பட வேண்டும் என்கிறது தேசிய நீர்க்கொள்கை-2012. அதன்படி, ஆற்று நீரும், நிலத்தடி நீரும், மழை நீரும் முற்றிலும் தனியார் பெருங்குழுமங்களுக்கு வழங்கப்பட இக்கொள்கை வழிவகுக்கிறது.
தேவையான குறைந்தபட்சத் தண்ணீரின் அளவு என்ன என்பதை புதிய தேசிய நீர்க்கொள்கை வரையறுக்காத நிலையில் தான், ஒரு கன மீட்டருக்கு 2 ரூபாய் வரை கட்டணத்தை நிர்ணயித்து தற்போது அறிவிப்பு செய்துள்ளது மத்திய நிலத்தடி நீர் ஆணையம்.
அதோடு, அணை மற்றும் நீர் நிலைகளையெல்லாம் மாநில அரசின் அதிகாரத்திலிருந்து பறித்து, தேசிய அளவில் நீர்நெறிமுறை ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிறது புதிய தேசிய நீர்க்கொள்கை. அந்த ஆணையம் மூலம் நீர் மேலாண்மை செய்யவும், ஆண்டுதோறும் பயன்படுத்தும் நீருக்கு கட்டணத்தை தீர்மானிக்கவும் வேண்டும் என்கிறது புதிய தேசிய நீர்க் கொள்கை. அதன் ஒரு பகுதி தொடர் நடவடிக்கையாகத் தான், தற்போது மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிப்பும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவும் அமைந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மனிதர்களுக்கும், சுற்றுச் சூழல் தூய்மைக்கும் தேவையான குறைந்தபட்ச நீர் வழங்கல் கூட, தனியாரின் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என தேசிய நீர்க்கொள்கை வரைவு குறிப்பிடுவதிலிருந்தே, நாட்டின் நீர் வளம் முழுவதும் கார்ப்பரேட் வணிகச் சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது உறுதியாகிறது.
ஏற்கனவே உலக வங்கியின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மானியத்தை குறைக்கும் நடவடிக்கையும், பொது விநியோகத் திட்டத்தையும் குறைத்திடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இனி நீர்வளமும் அப்படி மாறிவிடுமோ என்ற அச்ச உணர்வு மேலிடுகிறது.
நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்த கட்டண முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும், வீடுகளில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலன்று.
நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கும் முறை என்பது, தேசிய நீர்க் கொள்கை-2012 பரிந்துரைகளில் ஒன்றாகும். அதில் விவசாயத்திற்காக பயன்படுத்தும் நீருக்கும் கட்டணம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே, வருங்காலத்தில் விவசாய பயன்பாட்டு நீருக்கும் கட்டணமுறை அமல்படுத்தப்படும் என்பது உறுதி.
பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் நிதி ஆதாரத்துடன் செயல்பட்டுவரும் நீர் ஆதாரக்குழு-2030 பரிந்துரைப்படி உருவாக்கப்பட்ட, தேசிய நீர்க் கொள்கை-2012 கொஞ்சம் கொஞ்சமாக அமுல்படுத்தப்படுமானால், இனிமேல் தண்ணீர் என்பது அரசின் சேவை என்ற தலைப்பில் வராது. அது முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்டு, அரசு குடிநீர் வழங்கல் என்ற துறையிலிருந்து, வெறும் குடிநீர் வழங்கல் கண்காணிப்புத் துறையாக மாறிவிடும்.
ஆகவே, பொதுமக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கும் அறிவிப்பை வாபஸ் பெறுவதோடு, சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சி லாபம் கொழிக்கும் ஆலைகள், தண்ணீர் மாஃபியா நிறுவனங்கள், குளிர்பான நிறுவனங்களை கண்காணிக்கும், அவற்றின் சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்தும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் வர்த்தகமாக்கப்படுவதிலிருந்து சாதாரண குடிமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.