ஊரின் முகப்பில் வேப்பிலையால் வேலி அமைத்து, வெளியூரிலிருந்து அந்நிய நபர்கள் ஊருக்குள் வந்துவிடக்கூடாதென சுழற்சி முறையில் காவல் காத்து மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கரோனா வைரஸிலிருந்து தங்கள் மக்களை காத்து வருகின்றனர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவினை சேர்ந்த மதகுப்பட்டி, காந்திநகர் கிராம மக்கள்.
கரோனா பெருந்தொற்றுக் காரணமாக மக்களை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பம்பரமாக சுழன்று களப்பணியாற்றும் வேளையில், அரசிற்கு ஒத்துழைக்கும் விதமாக தங்களாலான முயற்சிகளை கையிலெடுத்து செயல்படுத்தி வருகின்றனர் சிங்கம்புணரி தாலுகாவிலுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய பறம்பு மலை எனப்படும் பிரான்மலையின் அருகிலுள்ளது மதகுப்பட்டி மற்றும் காந்தி நகர் கிராமங்கள். 400க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்தின் அடிப்படைத் தொழில் விவசாயம் என்றாலும், பகுதி நேரமாக கூலிக்கு பூக்கட்டும் வேலையை செய்து வருகின்றனர்.
இவர்கள் தமிழக அரசிற்கு ஒத்துழைப்பு நல்கும் விதமாக, தங்களை தாங்களேக் காப்பாற்றிக் கொள்ள வியாபாரிகள், வெளியூர் நபர்கள் ஊரின் உள்ளே வராமல் தடுக்க ஊரின் முகப்பில் மரங்கள், கயிறுகள் கொண்டு வழியை மறித்து வேப்பிலையால் வேலி அமைத்துள்ளனர். அது போக, வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகளை தடுக்கும் இக்கிராமத்தினர், பணிக்காக பக்கத்து கிராமங்களுக்கு சென்றுவிட்டு வருபவர்களை கண்காணித்து ஊரின் உள்ளே வரும் பொழுது அவர்களுக்கென தனித்தனியாக சோப், சானிடைசர் கொடுத்து கை, கால் கழுவியபின்னரே அனுமதிக்கின்றனர். இதற்கென ஊரின் எல்லையை கண்கானிப்பதற்கென்று சுழற்சி முறையில் ஆட்களை நியமித்து காவல்காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
படம்: விவேக்