![The umbilical cord is not cut, the boy lying in the trash](http://image.nakkheeran.in/cdn/farfuture/3lhGO0hCQYFTgK78yNSXfYq6sjF1K8_22fgCjo63i4I/1618319122/sites/default/files/inline-images/baby-leg-2.jpg)
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டையில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இந்த ஊரைக் கடந்து தான் தென் மாவட்டங்களில் இருந்தும் மேற்கு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்குச் சென்று வருவோர்கள் கடந்துசெல்ல வேண்டும். 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த ஊரில் உள்ள பஸ் நிலையம் அருகில் உள்ளது அரசு மருத்துவமனை. உளுந்தூர்பேட்டை சுற்றி உள்ள கிராம மக்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்கிக் கொள்வோரை மீட்டுக்கொண்டு வந்து இங்கு தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பரபரப்பான மருத்துவமனை அருகில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் உப்பிய நிலையில், ஒரு துணிப்பை கிடந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து விட்டு சந்தேகம் அடைந்துள்ளனர். அதனால், காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மருத்துவமனையில் இருந்த ஊழியர்களின் உதவியுடன் அந்த குப்பைத் தொட்டியில் கிடந்த துணிப்பை மூட்டையை எடுத்துப் பார்த்துள்ளனர்.
அந்த துணிப்பைக்குள் ரத்தக்கறையுடன் பிறந்து சில மணிகளே ஆன தொப்புள் கொடி கூட அறுபடா நிலையில் இறந்து போன நிலையில் ஒரு ஆண் குழந்தை கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள், காவல்துறையினர், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த குழந்தையைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். குழந்தையைக் கொன்று பைக்குள் திணித்து குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவர்கள் யார் அல்லது வேறு ஏதேனும் காரணமா? குழந்தை சடலமாக இந்த இடத்தில் எப்படி கொண்டுவந்து போடப்பட்டது எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.