மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. இதனிடையே கரோனா காலக்கட்டத்தால் நேர்காணலில் தாமதம் ஏற்பட்டு, நேற்று முன் தினம் வரை இந்த நேர்காணல் நடந்து முடிந்தது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டது.
பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் இந்திய அளவில் 47வது இடத்திலும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரது தாத்தா ரங்கநாதன் பண்ருட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன். இவரது தந்தை பெயர் ராமநாதன். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடலூருக்கும், பண்ருட்டிக்கும் இடையில் உள்ள கொள்ளுக்காரன் கொட்டை என்ற இடத்தில் ‘கிடா விருந்து ஓட்டல்’ என்ற பெயர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் தான் ஐஸ்வர்யா.
இதேபோல் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டையைசேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரது மகள் செல்வி பிரியங்கா என்பவர் தமிழக அளவில் மூன்றாவது இடம் பெற்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பண்ருட்டி பகுதியில் இரண்டு பெண்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றது அப்பகுதி மக்களை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. வெற்றி பெற்ற இருவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.