கடலூர் மாவட்டத்தில் கோ .பொன்னேரி, சாத்துக்கூடல், தீவளுர் வெண்கரும்பூர், கூடலூர், கொட்டாரம் ,வதிஷ்ட புறம், வையங்குடி ,சிறுப்பாக்கம் ,உட்பட சுமார் 120 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து காரிப் பருவத்திற்கான நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்யும் ஒரு மூட்டை நெல்லுக்கு சராசரி 50 ரூபாய் லஞ்சமாக கறாராக வசூலிக்கப்படுகிறது. எடை போடுவதற்கு ஒரு மூட்டைக்கு 15 ரூபாய் மட்டுமே விவசாயிகள் தர வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்து உள்ளது. அதற்கு மேல் யார் கூடுதலாக பணம் கேட்டாலும் உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு அரசு அறிவித்துள்ளது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 40 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து வசூல் செய்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இந்த நிலையில் சிறுபாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 50 ரூபாய் என்று விவசாயிகளிடம் வசூல் செய்து கொண்டிருந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் நேற்று(29.2.2022) இரவு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிறுபாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளைப் போல வந்து மறைந்து நின்றனர். அப்போது கொள்முதல் நிலைய எழுத்தர் ராமச்சந்திரன் லோடுமேன் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் விவசாயிகளிடமிருந்து பணமும் வசூல் செய்ததை கையும் களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாவட்டம் முழுவதும் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் இதுபோன்று விவசாயிகளிடம் கட்டாயம் லஞ்சமாக பணம் பிடுங்கும் ஊழியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு எந்த உத்தரவு போட்டாலும் அதை காற்றில் பறக்க விட்டுவிட்டு கையூட்டு வாங்குவதில் மட்டும் கை தேர்ந்தவராக உள்ளனர் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் "என்று தணியும் இவர்களது லஞ்ச தாகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.