எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் முதல்முறையாக 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் என இருவருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மனித மெட்டாப்நியூமோ வைரஸ் என்பது நியூமோவிரிடே குடும்பத்தின் ஒற்றை இழை ஆர்.என்.ஏ. வைரஸ் ஆகும், மேலும் இது ஏவியன் மெட்டாப் நியூ மோவைரஸ் துணைக்குழு சி உடன் நெருக்கமாகத் தொடர்புடையது. 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் முதன் முறையாகத் தனிமைப்படுத்தப்பட்டது. எச்.எம்.பி. வைரஸ் முதன்மையாகக் குழந்தைகளைப் பாதிக்கிறது. சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது வயதானவர்களையும் பாதிக்கிறது. இந்த கிருமி, மூக்கு சளி, நெஞ்சு சளி மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
எச்.எம்.பி. வைரசை ஆர்.என்.ஏ. ஆர்.டி. பி.சி.ஆர். (RNA RT PCR) பரிசோதனை மூலம் கண்டறியலாம். இந்த வைரசை குணப்படுத்தக் குறிப்பிட்ட மருந்து மற்றும் தடுப்பூசி எதுவும் இல்லை. போதிய ஓய்வு, நிறையத் திரவ உணவு, காய்ச்சல், சளிக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இருமும் போதோ, தும்மும் போதோ, வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணி வைத்து மூடிக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். நோய் அறிகுறி இருந்தால் பொது இடங்களுக்குச் செல்லுவதைத் தவிர்க்கவும். நோய் வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
துண்டுகள், சோப்பு, கைக்குட்டை போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. பொது மக்கள் இந்த வைரஸ் குறித்து சந்தேகம் இருப்பின் சுகாதாரத்துறையின் சார்பில் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் 9342330053 என்ற எண்ணிற்கும், கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 104 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிவுரைகள் பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.