கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்களை அதிக பாரத்தோடு கேரளாவுக்கு கடத்திச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, கனிம வள கொள்ளையை தடுக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் லாரிகள், இதே பகுதியில் விபத்துகளிலும் அடிக்கடி சிக்கிக்க் கொள்கின்றன. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடக்காமலிருக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம் பெற்றது. இதனால், நாகர்கோவில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் விரிவுப்படுத்தும் பணி தொடங்கியது. அதே சமயம் இந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் பல இடங்களில் கான்கிரீட் கட்டைகளால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இது அமைக்கப்பட்ட பிறகு விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பிறகுதான் தற்போது இந்தப் பகுதியில் அதிகமாக விபத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதில் கடந்த 10 நாட்களில் மட்டுமே சுமார் 6க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி லோடு ஏதும் இல்லாமல் டாரஸ் லாரி ஒன்று சென்றுள்ளது.
அப்போது, அந்த டாரஸ் லாரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்ற அந்த டாரஸ் லாரியை, வெள்ளிக்கோடு பகுதியில் உள்ள வளைவில் ஓட்டுனநர் திருப்ப முயன்றுள்ளார். ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த டிவைடர் சிமெண்ட் கட்டையில் என மோதியுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அந்த லாரியை அங்கேயே நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது டாரஸ் லாரியை நிறுத்த ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, அந்த லாரி வேகமாக புரண்டு பெரும் சத்தத்துடன் பொத்தென்று கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.