வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் கடந்த 03.01.2025 அன்று முதல் 05.01.2025 நள்ளிரவு 02:30 மணி வரை மூன்றாவது நாளாக தொடர்ந்து 44 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றது. மொத்தம் எட்டு கார்களில் வந்திருந்த 18 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கடந்த 3ம் தேதி இரவு எஸ்.பி.ஐ வங்கி வாகனத்தோடு துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு வங்கி ஊழியவர்கள் வரவழைக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் வெளியே சென்றுள்ளது. அதில் கணக்கில் வராத ரொக்கப்பணம் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாகவும். அது அமலாக்கத்துறை கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். மேலும் கல்லூரி தொடர்பான முக்கிய ஆவணங்கள், கணிணியின் ஹார்ட் டிஸ்க்கள், வாங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதற்கிடையில் திமுக எம்.பி கதிர்ஆனந்தின் தந்தையும், அமைச்சர் மற்றும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் இரவு 10:10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அமைச்சர் துரைமுருகன் ''என்னுடைய இலாகா சம்பந்தமாக டெல்லிக்கு போயிட்டு வருகிறேன். நீங்கள் எழுதியிருக்க கதைக்கெல்லாம் நான் ஆள் இல்லை .அதற்கும் எதற்கும் சம்மதம் இல்லை''என்றார்.