கடலூர் அருகே 15 வயது சிறுமி வீட்டில் துணியால் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருந்த பொழுது கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலிங்கம். இவருடைய மகள் ரிது வர்ஷினி (15 வயது) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிதுவர்ஷினி துணியை கட்டி அதில் ஊஞ்சல் விளையாடி வந்துள்ளார். அருகில் யாரும் இல்லாத நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென துணி பின்னி கழுத்தை இறுக்கிக் கொண்டது. உடனடியாக சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டார் சிறுமியை இறக்கி பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது.
இருப்பினும் இது உண்மையிலேயே ஊஞ்சலாடிய பொழுது அதனால் ஏற்பட்ட உயிரிழப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உடல் உடனடியாக மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடலூர் மாவட்டம் கோனூர் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.