![trichy college student incident police](http://image.nakkheeran.in/cdn/farfuture/bdRBU3Yag7wj77gIrJ_GcJ8SrnpOqil1UHNMVpyf3Yg/1653368486/sites/default/files/inline-images/nochi43434.jpg)
வற்புறுத்தி மாணவிக்கு விஷம் கொடுத்ததாகவும், அவரது இறப்புக்கு நீதி கோரியும் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பெற்றோரின் குற்றச்சாட்டுக்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், நொச்சிவயல்புதூரைச் சேர்ந்த19 வயது மாணவி, கடந்த மே 12- ஆம் தேதி அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், கூடுதல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழக்கும் முன் காவல்துறை மற்றும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தன்னை காதலிப்பதாக இளைஞர் ஒருவர் கூறி வற்புறுத்தியதாகவும், தான் மறுத்ததால் இரண்டு பேரோடு சேர்ந்து வலுக்கட்டாயமாக ஏதோ ஒன்றைக் குடிக்க தந்ததாகவும், அதனாலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
வாக்குமூலத்தின் அடிப்படையில் பெல் காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து கரண் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாகக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களும் சாலை மறியல் செய்தனர்.
உயிரிழந்த மாணவியின் தாயார் கூறுகையில், "மூன்று பேர் சேர்ந்து என் மகளுக்கு விஷம் கொடுத்துள்ளனர்" என்றார். மாணவியின் தந்தை கூறுகையில், "என் மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்; நாங்கள் சந்தேகம் இருப்பதாகக் கூறியவர்களை கைது செய்யவில்லை" எனத் தெரிவித்தார்.
இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறுகையில், "கடந்த மே 12- ஆம் தேதி அன்று மாணவி எலி பேஸ்ட்டைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிகிச்சையின் போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்னை வற்புறுத்தி யாரும் நஞ்சுக் கொடுக்கவில்லை. உடலை பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்ட பெற்றோர், திடீரென போராடுகின்றன" எனத் தெரிவித்தார்.
மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, கைது செய்யப்பட்ட இளைஞர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை கொலை முயற்சி, சந்தேக மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.