திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அம்மாகுளம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளராக தவ்பிக் (வயது 24) என்பவர் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் வினோத் என்பவரும் வசித்து வருகிறார். பாஜகவை சேர்ந்த இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர் என அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். கஞ்சா விற்பனைக்கு எதிராக தவ்பிக் குரல் கொடுத்து வருகிறார். அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பவர்கள் பற்றி போலீசுக்கும் தகவல் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தவ்பிக் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பாஜக பிரமுகர் வினோத் தலைமையில் வந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தவ்பிக்கை உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தவ்பிக்கை பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் வினோத் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென திருச்சி அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலைமறியலை கைவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், “தவ்பிக் போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். அப்பகுதியில் பல்வேறு மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவை சேர்ந்த வினோத் மற்றும் அவருடன் உள்ள சமூக விரோத கும்பலே இத்தகைய கொடூரச் செயலை செய்திருக்கிறார்கள். எனவே காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்த தவ்பிக்கிற்கு தமிழக அரசு உரிய மேல் சிகிச்சை வழங்கிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.