Skip to main content

"எனக்கு அவர் ஓனர்தான், அதுக்காக என் மனைவியை..." - கொலை செய்த டிரைவர் வாக்குமூலம்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
Kill the owner



ஜாமீனில் வெளியே வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரிடம் வேலை செய்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

கடலூர் மாவட்டம், புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன் (வயது 31). இவர் டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரில் வெள்ளைக்காரன் மகன் சக்திவேல் (24) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சில நேரம் முருகனே டிராக்டர் எடுத்து ஓட்டுவார். அப்படி ஒருமுறை தனது டிராக்டரில் முருகன் மணல் கடத்தியுள்ளார். 
 

அப்போது தியாகதுருகம் போலீசார், அந்த டிராக்டரை மடக்கி முருகனை கைது செய்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைத்தனர். கடந்த ஜூன் மாதம் 20ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த முருகன், 22ந் தேதி பிரிதிவிமங்கலம் மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். 
 

இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முருகனின் மனைவி வளர்செல்வியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சக்திவேல் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். இதையடுத்து சக்திவேலை போலீசார் தேடி வந்தனர்.
 

சக்திவேல் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். போலீசார் தேடுவது பற்றி அறிந்த சக்திவேல், பெரியமாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் சரண் அடைந்தார். அவர், சக்திவேலை தியாகதுருகம் போலீசில் ஒப்படைத்தார். சரண் அடைந்த சக்திவேலிடம் போலீசார் விசாணையில் ஈடுபட்டனர். 
 

போலீசில் சக்திவேல், நான் டிரைவராக இருந்தேன். முருகன் டிராக்டர் வாங்கியதில் இருந்து, அந்த டிராக்டருக்கு நான்தான் டிரைவராக இருந்தேன். அவர் டிராக்டர் எடுத்துக்கொண்டு எங்கெங்கு போக வேண்டும் என்று சொல்கிறாரோ அதன்படி செய்தேன். நாளடைவில் என்னிடம் நன்றாக பழகினார். திடீரென வீட்டுக்கு வந்து வேலை பற்றி சொல்லுவார்.
 

சில நேரங்களில் நான் வீட்டில் இல்லாதபோதும் வந்திருக்கிறார். இதைப்பற்றி அக்கம் பக்கத்தினர் எனக்கு சொன்னார்கள். நான் இதுபற்றி கேட்கும்போது, உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்பார். நான் அவர் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அவர் அதனை தவறாக பயன்படுத்திக்கொண்டார். 
 

நான் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு வரும்போது எனது மனைவியை ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி அவரது கையில் போட்டுக்கொண்டார். எனது மனைவிக்கும், முருகனுக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த நான் எனது மனைவியையும், முருகனையும் கண்டித்தேன். இருப்பினும் அவர்கள் கூடா நட்பை விடவில்லை.
 

இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. இதனை என்னால் அடக்கி கொள்ள முடியவில்லை. எனக்கு அவர் ஓனர்தான். அதற்காக என் மனைவியை எப்படி நெருங்கலாம். நான் எச்சரிச்சதையும் அவர் பொருட்படுத்தவில்லை. இதனால் முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான், அவரை பார்க்கும்போது நடந்தையெல்லாம் மறந்தவிட்ட மாதிரி காட்டிக்கொள்வேன். அவரும் என்னை நம்பினார். அவரிடம் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். 
 

அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ந் தேதி இரவு பிரிதிவிமங்கலம் மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி அதன் மூலம் மீன்பிடிக்க முருகனை அழைத்தேன். முருகனும் வந்தார். பின்னர் நான் மின்கம்பியை வளைத்து, அதில் குச்சியை கட்டி ஆற்றின் ஒரு பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வைத்தேன். மின்கம்பியின் மறுமுனையை, ஆற்றின் கரையில் இருந்த மின்கம்பத்தில் உள்ள மின்ஒயருடன் இணைத்தேன். இதில் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததில் மீன்கள் செத்து மிதந்தன.
 

இதையடுத்து மின்கம்பியை எடுத்து விட்டு, மீன்களை எடுத்து வருமாறு முருகனிடம் கூறினேன். அப்போது அவர் ஆற்றில் இறங்கியதும், மீண்டும் மின்கம்பியை மின்ஒயருடன் இணைத்து தண்ணீரில் போட்டேன். இதில் மின்சாரம் தாக்கி முருகன் உயிரிழந்தார். பின்னர் நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். பின்னர் போலீசார் எனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடம் என்னை பற்றி விசாரிப்பது தெரிய வந்தது. இதனால் வேறு வழியில்லாமல் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
 

விசாரணை முடிந்ததும் சக்திவேல் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
 

 

 

சார்ந்த செய்திகள்