
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிற சூழலில் நேற்றைய (20.03.2025) கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் பேச நேரம் கேட்டும் கொடுக்காததால் அவரது இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் அப்பாவுவை நோக்கி நடந்து சென்றார். இதற்கு சபாநாயகர் அப்பாவு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுகையில், “வேல்முருகன் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொள்கிறார். சட்டப்பேரவையின் மாண்பை மீறி நடந்து கொள்ளும் வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்ததில்லை. இனிமேல் வேல்முருகன் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது. அதே சமயம் எந்த உறுப்பினரும் இது போல் நடந்துகொள்ளக் கூடாது” என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ''தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் கலைஞர் கொண்டு வந்த, தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% வேலை வாய்ப்பு; தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்கின்ற சட்டத்தை அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை அறிந்தேன். இதை நான் கண்டுபிடித்து வழக்கறிஞர் அஜ்மல் கான் மூலமாக அன்றைய நீதிபதிகள் பிரபாகரன் புகழேந்தி இருவர் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, அவர் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் துறையின் சார்பாக டிஜிபியும் தமிழ்நாட்டின் உடைய அட்வகேட் ஜெனரலையும் மதுரைக்கு அழைத்து நீங்கள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்கள்.

இதை செய்தது நான். இதைத்தான் நான் சட்டமன்றத்தில் இன்று எழுந்து சொன்னேன். ஆனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என புரிந்து கொள்ளாமல் அதிமுக உறுப்பினர்களும் கத்துகிறார்கள், அமைச்சரவையில் இருக்கின்ற சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் கத்துகிறார்கள். நான் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு போராடிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு மறுக்கப்பட்டது. நேரம் கொடுங்கள் என கேட்டேன். அது தவறா? இதற்கு சேகர்பாபு 'நீ எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி பேசுகிறாய். எல்லாம் தெரிந்ததை போல் பேசுகிறாய்'' என ஒருமையில் பேசினார். உடனே அவர் இடத்தில் சென்று இதுபோல் என்னிடத்தில் ஒருமையில் பேசக்கூடாது என்றேன்.
நான் அதிகப்பிரசங்கி தனமாக பேசியதாக சேகர்பாபு குறிப்பிட்ட நிலையில் தமிழக முதல்வரும் சேகர்பாபு சொன்னதை போல் நான் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொண்டதாக அதே வார்த்தையை முதல்வர் சொன்னது உண்மையிலேயே எனக்கு வருத்தம் அளிக்கிறது'' என்று கூறியிருந்தார்.
நேற்று பேரவையில் இப்படியாக வேல்முருகனுக்கும் திமுக அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துகொள்ளாமல் வேலுமுருகன் ஆப்சென்ட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.