
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, தம்பதி இருவரும் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறி கடந்த 2021ஆம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்த அந்த பெண் நகைகளை விற்று இந்தியா திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021இல் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
தனது கணவர் நல்ல வருமானம் ஈட்டி, பணக்கார வாழ்க்கை முறையை வழிநடத்தி வந்த நிலையில், தனக்கு வேலையில்லாததாலும், தனக்கு வருமானம் இல்லாததாலும் தனக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை எதிர்த்து பெண்ணின் கணவர் பதில் மனு ஒன்று அளித்தார். அதில், நன்கு படித்து வேலைக்குச் செல்லும் திறமையுள்ள அந்த பெண், வேலையின்மையை மட்டும் காரணம் காட்டி ஜீவனாம்சம் கோர முடியாது என்றும், இதன் மூலம் அவர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி சந்திர தாரி சிங் அமர்வு முன்பு கடந்த 19ஆம் தேதி வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கூறியதாவது, “வாழ்க்கை துணைவர்களிடையே சமுத்துவத்தைப் பேணுவதற்கும், மனைவிகள் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் நோக்கமாக கொண்டது இந்த பராமரிப்பு உதவித் தொகை; சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கப்பதற்காக அல்ல.
நன்கு படித்து, தகுந்த லாபகரமான வேலையில் அனுபவம் பெற்ற மனைவி, தன் கணவரிடமிருந்து பராமரிப்பு பெறுவதற்காக மட்டுமே சும்மா இருக்கக்கூடாது. எனவே, இந்த வழக்கில் இடைக்கால பராமரிப்பு ஊக்கமளிக்கப்படாது. ஏனெனில், அந்த பெண் தனது கல்வியின் மூலம் பணம் சம்பாரிப்பதை இந்த நீதிமன்றம் கண்காணித்துள்ளது அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதையும், திருமணத்திற்கு முன்பு துபாயில் நல்ல வருமானம் ஈட்டி வந்ததையும் இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது.
அடிப்படை வாழ்வாதாரத்திற்காக தங்களது கணவரையே நம்பியிருக்கும் படிக்காத பெண்களைப் போல் அல்லாமல், உலகத்தைப் பற்றி இந்த பெண்ணுக்கு பரந்த வெளிப்பாடு இருக்கிறது. உடல் தகுதியும், கல்வி தகுதியும் இருந்தபோதிலும், அவர் இந்தியா திரும்பியதிலிருந்து வேலைக்குச் செல்லாமல் ஏன் சும்மா இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பரந்த உலக அறிவு பெற்ற அவர், தன் தன்னிறைவுக்கு நல்ல வேலையை தேடிக் கொள்ளலாம்” என்று கூறி பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.