
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். ம.தி.மு.க கட்சி நிர்வாகியான இவர், அரியாங்குப்பம் கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று (04.11.2020) இரவு 9.30 மணிக்கு மூன்று நபர்கள் வந்துள்ளனர். கல்லாப்பெட்டியில் பணம் எவ்வளவு இருக்கு என்று கேட்டுள்ளனர். இதற்கு காசாளர் பதில் கூற மறுத்து, 'உங்களுக்கு என்ன வேண்டும்...?' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், 'ஒட்டகப்பால் வேண்டும், கிடைக்குமா?' எனக் கேட்க, 'கிடைக்காது' எனக் காசாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பேசிக்கொண்டிருந்த அவர்கள் கடையில் அடுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து எறிந்தும், கீழே தள்ளியும் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், காசாளரிடம் இருந்து பணத்தை எடுக்க முயன்றனர். அப்போது ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து அவர்களை விரட்டினார்கள். இதையடுத்து 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் விரைந்து வந்து சி.சி.டி.வி காட்சியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தகராறு செய்த நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதே கும்பல், அப்பகுதியில் சில நாட்களாகப் பல்வேறு கடைகளிலும் ரகளையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.