Skip to main content

கரோனா ஊரடங்கால் 100 கி.மீ. சைக்கிளில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள்!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

workers of ariyalur pedals cycle for 100 kms to work place

 

கரோனா ஊரடங்கினால் வேலைக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதி இல்லாமல் 100 கி.மீ தூரம் சைக்கிலிலேயே வேலைக்குச் செல்கின்றனர் அரியலூர் மாவட்ட மக்கள்.

 

உலகமே கரோனாவால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வந்தாலும் பல்வேறு புதுப் புது அனுபவங்களையும் தந்துள்ளது. காலம் தந்த பாடமா? இல்லை கரோனா தந்த பாடமா? எனப் பட்டிமன்றமே வைக்கலாம். அரியலூர் மாவட்டத்திலும் கூலித்தொழிலாளர்கள் தங்களது அன்றாட பிழைப்பை நடத்துவதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறார்கள்.

 

அதில் அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் அன்றாடப் பிழைப்புக்காக தினந்தோறும் பேருந்தில் அரியலூர் நகரத்தைச் சுற்றி வேலைக்குச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது கரோனா ஊரடங்கால் பேருந்துப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் வேலைக்குச் செல்ல முடியாமல் அவதிபட்டு வந்தனர். அன்றாடம் வீட்டுச் செலவுக்கே திண்டாடிய வேளையில் கூலித்தொழிலாளர்கள் இனியும் வீட்டில் முடங்கிக் கிடந்து பலனில்லை, டூவீலர் வாங்கவும் வசதியும் இல்லை. ஆனாலும் பழகிக் கொள்வோம் என முடிவெடுத்து பரண் மேல் மூட்டைக்கட்டி வைத்திருந்த பொருட்களைத் தூசி தட்டி பழைய பொருட்களைப் பயன்படுத்துவது போல பழைய சைக்கிளைம் உருண்டோட சின்னச் சின்ன பழுதுகளை நீக்கித் தயார் செய்தனர்.

 

இதுகுறித்துக் கூலித்தொழிலாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது, “சைக்கிள் பயணத்துக்கு முன்னாடி நடந்தே போயித்தான் வேலை பார்த்து வந்தோம். அப்புறமா ஊருல ஒரு சிலர் தான் சைக்கிள் வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் நிறைய சைக்கிள் வந்துச்சு அதுக்கப்புறம் 1990 களுக்குப் பிறகுதான் டூவீலர் பரவலாச்சு. மக்கள் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இப்ப 2020ல டூவீலர் இல்லாட்டி எங்கேயும் போக முடியாதுங்கிற நிலை இருக்குதுங்க. தற்போது கரோனா ஊரடங்கால வெளியில டூவீலர் இல்லாதவங்களால எங்கேயும் போக முடியாம சிரமமாக இருந்துச்சு. இனியும் நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி மீண்டும் சைக்கிள் எடுத்துட்டோம். ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரம் அரியலூர் போயி வேலை செய்து குடும்பத்த காப்பாத்தறோம். இதனால காலையில ஆறு மணிக்கு சைக்கிள எடுத்திட்டு 8 மணிக்கிளாம் வேலைக்கு போயிறனும் மாலையில 4 மணிக்கு எல்லாம் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு இருட்டுவதற்குள் வீடு திரும்பிடுவோம்” எனக் கூறினர்.

 

மேலும் கூறுகையில், “டிராபிக் போலீசார் மறித்து இன்ஷ்யூரன்ஸ் லைசென்ஸ் இருக்கா ஆர்சி புக் இருக்கானு கேட்கறது இல்ல. இன்னும் சொல்லப் போனால் பெட்ரோல் டீசல் விலை ஏறினாலும் கவலையில்லை. சைக்கிள மிதிக்கிறதுனால உடம்புக்கும் நல்லது,” என்றனர். “எங்களைப் போல நீங்களும் சைக்கிளுக்கு மாறிட்டீங்கனா பெரும் செலவு குறையும். நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் வாழலாம் அதிக பெட்ரோல் டீசல் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு வராது உலக வெப்பமயமாதலிருந்தும் நம்மல நம்ம தலைமுறையைக் காப்பாத்திக்கலாம்,” என்று கரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் சைக்கிள் பயணத்துக்கு மாறிய கூலித்தொழிலாளர்கள் நீண்ட அனுபவத்தை விளக்கினர்.

 

http://onelink.to/nknapp

 

ஆனாலும், ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர்கள் சைக்கிளில் வேலைக்குச் செல்வது என்பது மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது. ஓரளவிற்கு மேல் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைச் சீராக்க, அவர்கள் பணிக்குச் செல்ல போதிய வசதிகள் இருக்கும் வகையில் ஊரடங்கினை அமல்படுத்த வேண்டும் என்பதே இப்போதைக்கான தீர்வு.

 

 

சார்ந்த செய்திகள்