நாகை மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்குகூட கரோனா இல்லை, வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்பியவர்களை வீடுகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் 520 நபர்களில் 70 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருக்கிறார். அமைச்சர் ஓஎஸ்.மணியன்.
உலக நாடுகளுக்கே சவால்விட்டு அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் ஜெட்வேகத்தில் பரவுவதாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னெச்சரிக்கை பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில், " நாகை மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்களை தீவிர வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். 520 நபர்களில் 70 நபர்களுக்கு நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை என விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 450 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
![nagapattinam](http://image.nakkheeran.in/cdn/farfuture/4ZTUbTfs8cWnLL0DbalzmzEcCLJ6Sr7sSshBh97XT94/1585502138/sites/default/files/inline-images/504_3.jpg)
ஊரடங்கை சாதகமாக்கிக்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை கூடுதலாக விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள் தேவையற்ற பயணம் மேற்கொண்டால் காவல்துறை மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஏற்கனவே நாகை மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு கரோனா அறிகுறி இருந்தது. அவர்களில் 3 பேருக்கு நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு முடிவு இன்னும் வரவில்லை.
நாகப்பட்டினத்தில் 140 படுக்கைகளுடனும், மயிலாடுதுறையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் தயாராக உள்ளது. ஆகவே ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்" என்றார்.