
கடலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம், பெத்தான் குப்பம் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் சுமார் 160 ஏக்கர் நிலம் விவசாய பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என கையகப்படுத்தப்பட்டு முந்திரி காடுகள் அழிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வேளாண் பகுதிகளை அழித்து ஏன் தொழிற்சாலை கொண்டுவர வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வந்தனர். இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் விவசாயிகள் மற்றும் கட்சியினர் இணைந்து போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து செல்லாததால் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அனைவரும் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு வண்டியில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.