
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கரிசல்பட்டி, ஆடலூர், பன்றிமலை, தருமத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த தி.மு.க. பிஎல்2, பில்எசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கரிசல்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான பசிவகுருசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர் தருமத்துப்பட்டி பிரபாகரன், கரிசல்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பால்ராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோனூர் திருப்பதி, ஜஸ்டின் மிக்கேலம் மாள், சுப்புலட்சு மிவள்ளுவர்தாஸ், தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி கலந்துகொண்டார். அதன் பினு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், “ முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுபோல வருங்கால தமிழகம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் காக்க இந்தியாவே போற்றும் அளவிற்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை வாட்சப் மற்றும் குறுந்தகவல் மூலம் பரப்பி வருகின்றனர். இதை முறியடிக்கவும், நமது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் சாதனைகளை எடுத்துரைக்கவும் ஐடிவிங் பொறுப்பாளர்கள் அனுப்பும் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் அன்றாடம் நடைபெறும் தமிழக அரசின் நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்டங்களை நீங்கள் அருகில் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் செயல்படவேண்டும். வார்டு செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வரும் 2026 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும். ஆத்தூர் தொகுதியின் கொடை வள்ளலாக செயல்படும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சாதனை திட்டங்கள் மற்றும் ஆத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்” என்றார்.
அதைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந் தலைவருமான சிவகுருசாமி பேசும்போது, “திமுகவினரை பொறுத்தவரைத் தேர்தல் பணியாற்றுவதில் யாரும் சுணக்கம் அடைவது கிடையாது. ஆனால் எதிர்க்கட்சிகள் குறுந்தகவல்கள் மூலம் நமது கட்சியையும், தலைவர் ஸ்டாலின் மீதும் அவதூறாக பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். அதை முறியடிக்கத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் போடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வினர் திட்டமிட்டு நமது முதல்வர் மு.க.ஸ்டாலினை அவமானப்படுத்தும் நோக்கில் ஒயின் ஷாப்களில் முதல்வர் போட்டோவை ஒட்டி வருகின்றனர். இதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஆத்தூர் தொகுதியில் எந்த இடத்திலும் யாரையும் படம் ஒட்டவிடக்கூடாது. அப்படி ஒட்ட வருபவர்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். அவர்களை ஓட ஓடக் கூட விரட்டி அடியுங்கள். நம்மை ஆத்தூர் தொகுதியின் காவல் தெய்வம் அண்ணன் ஐ.பி. காப்பாற்றுவார். இதை உணர்ந்து செயல்படுங்கள்” என்று கூறினார். கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.