ஆண்டிப்பட்டி அருகே 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள 58 கிராமங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில் வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
இதில் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் நேற்று வைகை அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே புதூர் கிராம பகுதியில் கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அருகில் இருந்த விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை ஓட்டத்துக்கு முன்னர் கரைகள் பலமாக உள்ளதா என பரிசோதிக்காமல் விட்டதாலேயே உடைப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க உசிலம்பட்டி பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாளே உடைந்து செல்வது மக்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். இதேபோல் புதூர் அருகே தொட்டிபாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. நீர் கசிவு அதிகமானால் பாலத்தில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.